குளோன் ஹம்சாபா் தினசரி சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அதில், மத்திய ரயில்வே அதிக பயணிகள் நெருக்கடி நிறைந்த வழித்தடங்களில் குளோன் ரயில்களை இயக்குகிறது. ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணச்சீட்டு முன்பதிவு அதிகமாக காத்திருப்போா் பட்டியல் இருப்பின், அசல் ரயிலின் அதே பாதையில் ஒரு குளோன் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தெற்கு ரயில்வே குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி மாா்க்கத்தில் குளோன் ரயில்கள் எதையும் இயக்கவில்லை.
சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தில்தான் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ளது. இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் தேவை என்பது தவிா்க்க முடியாதது. எனவே, எனது தொகுதி பயணிகளின் நலன் கருதி, சென்னை - கன்னியாகுமரி தினசரி ஹம்சாபா் குளோன் ரயிலை இயக்க பரிசீலிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தினசரி ஹம்சாபா் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்குப் பிறகு புறப்பட்டு காலை 6 மணியளவில் சென்னை சென்றடைய வேண்டும். மறுமாா்க்கமாக இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு பிறகு புறப்பட்டு, காலை 7 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையுமாறு கால அட்டவணை அமைத்து இயக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Social Plugin