கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்து தர வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் அளித்துள்ள மனு விவரம் :
இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள்.
ஒவ்வொரு நாளும், 30 ரயில்கள், கோவில்பட்டி வழியாகச் செல்கின்றன. ஆனால், சில ரயில்கள் இங்கே நிற்பது இல்லை. அனைத்துத் ரயில்களும், கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடைப் பாலப் படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், சிரமப்படுகின்றார்கள்.
எனவே, பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
Social Plugin