சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க தென்னக ரயில்வே ஒப்புதல்


  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல் – CMRL)
  • பறக்கும் ரயில் : மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ் – MRTS)

சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தை இணைப்பது குறித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் (மே 11) தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பறக்கும் ரயில் (MRTS) வழித்தடத்தை மெட்ரோ ரயிலுடன் இணைக்க தெற்கு ரயில்வே கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து பூங்கா ரயில் நிலையம் வரையில் புதிய வழித்தடம் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக மாநில அரசுக்கும் தெற்கு ரயில்வேக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டுக்குப் பிறகு MRTS – CMRL இணைப்பு குறித்த பேச்சு வார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

சென்னை பறக்கும் ரயில் வழித்தடம் 15 கி.மீ. நீளம் கொண்டது (சென்னை கடற்கரை - வேளச்சேரி). சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் வழியே செல்லும் இந்த வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன.

சென்னை புறநகர் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் MRTS வழித்தடம் இரண்டாம் கட்டமாக மேலும் மூன்று ரயில் நிலையங்களுடன் 5 கி.மீ. நீட்டிக்கப்பட இருக்கிறது(வேளச்சேரி - பரங்கிமலை).

இந்த வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வகிக்கும் நிலையில் பறக்கும் ரயில் நிலையங்களில் காலியாக உள்ள ஏராளமான இடங்கள் வருமானத்தைப் பெருக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அதற்கான முயற்சியில் தனியார் பங்களிப்புடன் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.

நாளொன்றுக்கு 4.25 லட்சம் பேர் பயணிக்க கூடிய திறன் கொண்ட MRTS அதன் முழு பயன்பாட்டை எட்டவில்லை என்றும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 100 கோடி இழப்பீட்டை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.