சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

மெட்ரோ ரெயில் 2-வது திட்டத்திற்கு 26 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்க ஒப்பந்தம்

மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே இப்பாதைகள் அமைய உள்ளன.

கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையே 26.8 கி.மீ. நீளமுள்ள 3-வது வழித்தடத்தில் 9 ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்த வழித்தடத்துக்கு இடையே உள்ள 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும், அதனை ஈடுகட்டும் வகையில் 1,596 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் தெரிவித்து சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியது.

ரூ.12,669 கோடி செலவிலான இந்த திட்டத்தில் ரூ.22 கோடியே 33 லட்சம் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதை ஏற்றுக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதையில் ரெயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள், சுரங்கம் தோண்டும் எந்திரம் போன்றவை விரைவில் வர உள்ளன.

இந்தநிலையில் பூந்தமல்லி-கலங்கரைவிளக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவைக்கு ரெயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘அல்ஸ்ட்ராம்’ நிறுவனத்திற்கு 78 பெட்டிகள்(26 மெட்ரோ ரெயில்கள்) தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

3 பெட்டிகளை உள்ளடக்கிய ஒரு மெட்ரோ ரெயிலின் நீளம் 66 மீட்டர் ஆகும். இதில் 900 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். திட்டம் ஒன்றில் 4 பெட்டிகள் கொண்ட ரெயில் தயாரிக்கப்பட்டது. அது 1200 பேர் பயணம் செய்யக் கூடியதாகும். ரெயில் பெட்டியின் அளவு குறைவாக இருப்பதால் மேலும் 3 பெட்டிகளை இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.