சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு : ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு : விபத்து ஏற்பட்டதற்கு காரணம் அதிவேகம் மட்டுமே !

கடந்த, 2018 - 21 ம் ஆண்டு வரையிலான மூன்றாண்டுகளில், வெவ்வேறு ரயில் விபத்துகளில், 10 யானைகள் உயிரிழந்துள்ளன. கோவை பாலக்காடு இடையேயான ரயில்வே பாதையில், மொத்தம், 28 யானைகள் உயிரிழந்துள்ளன.


மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தை ஒட்டி மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயதுடைய பெண் யானை, 6 வயதுடைய குட்டியானை மற்றும், 18 வயதுடைய மக்னா யானையுடன் நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றன.அப்போது அவ்வழியாக கேரளாவிலிருந்து மங்களூர் - சென்னை இடையே இயக்கப்படும் மெயில் வண்டி (வண்டி எண்: 12602) வேகமாக வந்து, யானைகள் மீது மோதியது.

இதில் யானைகள் ரயில் இன்ஜினில் சிக்கி படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 

ரயில் மோதி உயிரிழந்த மூன்று யானைகளில் ஒன்று, 18 வயதுடைய மக்னா யானை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தமில்லாத ஆண் யானையே மக்னா யானை என குறிப்பிடப்படுகிறது.


தொடர்ந்து யானைகள் மீது மோதிய ரயில் என்ஜினை கைப்பற்றிய வனத்துறையினர் அதை வாளையார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, மாற்று லோகோ பைலட்கள் மூலம் ரயில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று காலை வனத்துறையினர் மூன்று யானைகளின் சடலங்களையும் ஆய்வு செய்தனர்.  யானைகளின் கால், இடுப்பு, பின்புறம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உயிரிழந்த, 25 வயது பெண் யானையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. 

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறியதாவது: வாளையார் - மதுக்கரை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகள் உயிரிழந்துள்ளன. இரு யானைகள், 30 மீட்டர் தூரத்திலும், 145 மீட்டர் தூரம் தள்ளி பெண் யானையும் இறந்து கிடந்தன. வனத்துறை, ரயில்வே துறை உடன்பாட்டின் படி ரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. 

அதிக வேகம் ?

ரயிலை அதிகபட்சம், 45 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஆனால், சிறப்பு ரயில் என்பதால், அப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் ரயில் இயக்கப்படவில்லை. மாறாக, குறிப்பிட்ட பகுதியில், 75 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதன் காரணமாகவே, யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலை நிறுத்த முடியவில்லை என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இரு யானைகள், 30 மீட்டர் தூரத்திலும், 145 மீட்டர் தூரம் தள்ளி பெண் யானையும் இறந்து கிடந்தன. 


ரயில் வரும் போது யானைகள் ஒதுங்க இடம் இல்லாதது காரணமாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட பகுதியில், யானைகள் ஒதுங்க இடம் இருந்து அவற்றால் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் அதிவேகம் மட்டுமே என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ரயில் என்ன வேகத்தில் சென்றது 

ரயில்களின் வேகத்தை கணக்கிட ரயில் என்ஜினில், பிரத்யேக சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப் மூலம், விபத்து நடந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் வேகத்தை கணக்கிட முடியும். இதை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் பதிவாகியுள்ள தகவல்களை திரட்ட, சேலம் கோட்டத்தை சேர்ந்த ஈரோடு ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிப்பில் உள்ள தகவல்களை வனத்துறையினர் முன் திறந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதன் மூலம் ரயில் விபத்து நடந்த போது அதிவேகத்தில் சென்றதா என்பது குறித்து தெரியும்.

ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

யானைகள் மீது மோதிய ரயிலின் பிரதான லோகோ பைலட்டாக கேரள மாநிம், கோழிக்கோடு புன்னார்சேரியை சேர்ந்த சுபேர், 54 என்பவர் இருந்துள்ளார். இவரே ரயிலை இயக்கியுள்ளார். இவர், 28 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர். இவருடன் உதவி லோகோபைலட்டாக, கேரள மாநிலம் திருச்சூர், ஓல்லுாரை சேர்ந்த அகில், 31 என்பவர் இருந்தார். இவர் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர். 

இவர்கள் இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும் ரயில் எஞ்சினில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பீடோ மீட்டரை தரும்படியும் தமிழக வனத்துறை அதிகாரிகளைக் கேரள ரயில்வே அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.