சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு ; விசாரிக்க சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைப்பிடிப்பு !

Photo Courtesy - Srini Subramaniam, Coimbatore.

தமிழக - கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை ஒன்று உள்ளது. கேரளத்திலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்குச் சென்று வருகின்றன.

நேற்றிரவு 9 மணி அளவில் மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது. வாளையாறு பகுதியைக் கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக, சுமார் 20 வயது மதிக்கத்தக்க மக்னா யானையுடன் வந்த இரண்டு பெண் யானைகள் மீதும் ரயில் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன.

இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து அப்பாதையில் சிறிது நேரம் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

சம்பவம் இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மூன்று யானைகளுக்கும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். அதன்படி நடைபெற்ற பிரதே பரிசோதனையில் உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது உறுதி செய்யப்பட்டது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுபயர் மற்றும் அவரது உதவியாளர் முகில் ஆகியோரை வாளையார் பகுதியில் வைத்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரளா ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை விசாரிக்க சென்ற 6 வன அதிகாரிகளை சிறை பிடித்துள்ளதாகவும், ரயில் என்ஜினில் பொறுத்தப்பட்டுருந்த வேகத்தை பதிவு செய்யும் சிப்பை ஒப்படைக்க கோரி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும் அதிவேக ரயில்களில் அடிபட்டு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 யானைகள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.