சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

ஆண்டிபட்டி - தேனி அகல ரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம்


மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே 58 கி.மீ. தூரமுள்ள மதுரை - ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கிடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  ஆய்வு பணிகளை முடித்துள்ளார்.

தற்பொழுது ஆண்டிபட்டி - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கி.மீ. தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் வருகிற சனிக்கிழமை (செப் 4) ஆண்டிபட்டி - தேனி புதிய அகல ரயில் பாதையில் காலை 09.00 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போர் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே கட்டுமான இணைப் பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தென் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆய்வு நடத்த உள்ளார்.

அதே சமயம் இந்த திட்டத்தில் எஞ்சியுள்ள தேனி - போடிநாயக்கனூர்(15 கிலோமீட்டர் ) பிரிவில் அகல ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.