ரயில்வே வாரியத்திற்கு போடியில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை : மதுரை - தேனி இடையே செப். ரயில் சேவை துவங்க வாய்ப்பு

மதுரை- போடி இடையே 90.4 கி.மீ.துார மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றும் பணி 2011 ல் துவங்கியது. முதற்கட்டமாக மதுரை- உசிலம்பட்டி வரையும், 2வது கட்டமாக உசிலம்பட்டி -ஆண்டிபட்டி இடையே 21 கி.மீ. துார பணிகள் முடிந்து. கடந்த டிசம்பரில் சோதனை ஓட்டம் நடைப்பெற்றது.

இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி -தேனி இடையே 17 கி.மீ. துார பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. தேனியில் 3 இடங்களில் ரயில்வே கடவு பாதை, சமிஞ்சை, மழைநீர் வாய்க்கால், நிலைய பணிகள் முடிந்தது. தற்போது வண்ணம் பூசும் வேலை நடக்கிறது.

ஆண்டிப்பட்டி - தேனி இடையே ஆய்வு.

இந்நிலையில் அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்றுதை தொடர்ந்து, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் கோரியுள்ளனர். 

பாதுகாப்பு ஆணையர் ஆகஸ்ட் 3வது வாரத்தில் வர உள்ளார். சோதனை ஓட்டத்தில் இவரின் ஆய்வுக்குப்பின் ரயில் இயக்க ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் மதுரை - தேனி இடையே தினசரி ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போடி - சென்னை சென்ட்ரல் ரயில்.

இதற்கிடையில் மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதனை போடி - சென்னை இடையே இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி போடியில் இருந்து இரவு 8:35க்கு புறப்பட்டு, மதுரைக்கு 10:25க்கு வந்து 10:45க்கு புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 7:50க்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10:30க்கு புறப்பட்டு, மதுரைக்கு காலை 7:20க்கு வந்து 7:40க்கு புறப்பட்டு, போடிக்கு காலை 9:40க்கு சென்றடையும்.

மதுரை - போடி இடையே உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை