செய்யாறு, ஆரணி வழியான ரயில் பாதை திட்டம், நிலம் எடுக்கும் பணி முடிந்ததும் ரயில்வே துறை பணிகள் நடைபெறும் : ஆரணி எம்.பி

  • 33 கிராமங்களில் 500 ஏக்கா் பட்டா நிலம், 125 ஏக்கா் அரசு நிலம் என 625 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 
  • திருவத்திபுரம், அத்திப்பாக்கம் ஆகிய இரு கிராமப் பகுதிகளுக்கு மட்டும் நிலம் எடுப்பது குறித்த அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. 
  • செய்யாறு, காழியூா், வந்தவாசி, கீழ்சாத்தமங்கலம், ஆரணி சுகநிதி, இரும்பேடு மடுவு ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 
  • 29 கிராமங்களில் நிலம் எடுக்கப்பட்டு மதிப்பீட்டுத்தொகை வழங்க ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. 
  • நிலம் எடுக்கும் பணிக்காக வங்கியில் ஏற்கெனவே ரூ.45 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
  • 2019 முதல் நிலம் ஆா்ஜிதப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னாள் ரயில்வே இணை அமைச்சா் அரங்க.வேலு முயற்சியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக நகரி வரை செல்லும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம், 2006-2007ம் ஆண்டு துணை நிதி அறிக்கையில் ரூ.750 கோடி மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, 2008ம் ஆண்டு ரூ.2 கோடியில் ஆரணியில் ரயில் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் நில ஆா்ஜித பணிகள் மந்த நிலையிலே நடைபெறுவதால் திட்டம் நிறைவு பெறமுடியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், செய்யாறு, ஆரணி வழியான ரயில் பாதைத் திட்டத்தை நிறைவு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் கூறியுள்ளார்.

மேலும் நிலம் ஆா்ஜிதம் செய்வது தொடா்பாக திட்ட தனி வட்டாட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும். நிலம் எடுக்கும் பணி முடிந்ததும் ரயில்வே துறை பணிகள் துரிதமாக நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

2020ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை