தெற்கு ரயில்வேயில் 42 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது - மக்களவையில் பியுஷ் கோயல் தகவல்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு. பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணத்தால் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல்வேறு ரயில்களின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், பயணிகள் ரயில்கள் விரைவு வண்டிகளாகவும், விரைவு ரயில்கள் அதிவிரைவு வண்டிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 42 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘பிரீமியம் இண்டெண்ட்’ என்னும் சிறப்பு கொள்கையின் மூலம் வாடிக்கையளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரயில்வே  மேற்கொண்ட நடவடிக்கைகளின்  காரணமாக, 2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரையிலான ஐந்து மாதங்களில் இது வரை இல்லாத அளவு சரக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளது. சரக்கு ரயில்களின் மூலம் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இது வரை, 24 பெட்டிகள் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு ரயில்வே காவலர்கள் பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயில்வே உதவி எண்ணான 139-ஐ 24 மணி நேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘மேரி சஹேலி’ என்னும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, மகளிர் காவலர்களை கொண்ட பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் சூரிய சக்தி உபகரணங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் ரயில்வே மேற்கொண்டு வருகிறது, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 79 நிலையங்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.

60 ரயில் பெட்டிகளில் சூரிய சக்தி உபகரணம் பொருத்தப்பட்டு, விளக்கு மற்றும் மின்விசிறிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், ஜனசதாப்தி விரைவு ரயில் வண்டியின் 7 பெட்டிகளில் சூரிய சக்தி உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் புதுதில்லி ரயில் நிலையத்திற்கு புத்தாக்கம் அளிக்கப்படுகிறது.

குஜராத்தில் அகமதாபாத், காந்தி நகர், நியூ புஜ், சபர்மதி, சூரத் மற்றும் உத்னா ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக, விவசாயிகள் (கிசான்) ரயில்களில் எடுத்து செல்லும் கூடுதல் பொருட்களுக்கு (மஞ்சள் மற்றும் மாண்டரின்) மானியம் வழங்கப்படுகிறது.

ரயில்வே பணியாளர்களுக்கு படிப்படியாக கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 13,117 நபர்களுக்கு இது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 கி.மீ புதிய ரயில் தடம், 227 கி.மீ. இரட்டைத்தடம் மற்றும் 157 கி.மீ அகலப்பாதைக்கு மாற்றம் உள்ளிட்ட பணிகள் மத்தியப் பிரதேசத்தில் 2019-20 மற்றும் 2020-21 வருடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.