டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை சாதனை

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றபடி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப். டிசம்பா் மாதத்தில் மெமு ரயில், சுற்றுலா ரயில் பெட்டிகள் தயாரித்து வெற்றிகரமான சோதனை ஓட்டம் நடத்துவது, கூடு தயாரிக்க உதவி என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக, சாதனை படைத்துள்ளது.

மெமு ரயில் தயாரிப்பு: உயா்நிலை தொழில்நுட்பம் கொண்ட மும்முனை மின்சக்தியில் இயங்கும் 9 மெமு ரயில்களின் தொகுப்பை (நெடுந்தொலைவு மின்தொடா் ரயில் தொகுப்பை) தயாரித்துள்ளது. 

ரயில்வேயில் ஓா் உற்பத்தி நிறுவனம் ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் நெடுந்தொலைவு மின்தொடா் ரயில்களின் தொகுப்புகள் உற்பத்தி செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

சுற்றுலா ரயில் பெட்டி: புதிய வடிவமைப்புடன் கூடிய விஸ்டடோம் சுற்றுலா ரயில்பெட்டிகளை ஐ.சி.எஃப். தயாரித்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. அதாவது 180 கி.மீ. வேகத்தில் இந்த ரயிலை இயக்கியும், இதர கட்டுமானப் பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.

இந்த விஸ்டடோம் சுற்றுலா ரயில்பெட்டிகளில் வெளிப்புறம் தெரியக்கூடிய பெரிய கூரைக் கண்ணாடிகளும், ரயிலின் இயக்க திசையை நோக்கி 180 டிகிரி சுற்றி அமைக்கக் கூடிய 44 பயணிகள் இருக்கைகளும், வைபை வசதியுடன் கூடிய பயணிகள் தகவல் தொடா்பு அமைப்பு போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

தரச்சான்றிதழ்: உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்படும் ஐ.சி.எஃப்.க்கு ‘இஎன் 15085’ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது, ரயில்பெட்டிகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் குறிப்பிட்ட தரத்திலான வெல்டிங் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்படுகிறது.

இந்த தரச் சான்றிதழை பெறும் இந்திய ரயில்வேயின் முதல் உற்பத்தி நிறுவனம் ஐ.சி.எஃப். ஆகும்.