மதுரை ரயில் நிலையத்திற்கு என்.எம்.ஆர். சுப்புராமன் பெயர்சூட்ட கோரிய வழக்கு : உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்துவைத்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன். பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்த இவர், 60 ஆண்டுகள் காந்தியடிகள், வ.உ.சி., ராஜாஜி போன்றவர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

இதற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். இவரது மனைவி பர்வதவர்த்தினி அம்மாளும், அந்நிய துணிகள் எரிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

தனது சொத்துகளை எளிய மக்களுக்கு வழங்கிய என்.எம்.ஆர். சுப்புராமன், சொந்த செலவில் தனது தந்தையின் பெயரில் மருத்துவமனை நிறுவி மக்களுக்குச் சேவை செய்துள்ளார். காந்தியடிகளின் அனுமதிபெற்று 1930ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் வார்டு கவுன்சிலராகப் போட்டியில்லாமல் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

அதன்பின் மாநகராட்சித் தலைவராகவும், பின் எம்எல்ஏ, எம்பியாகவும் தேர்வுசெய்யப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளார். அதேபோல பல்கலைக்கழக முதல் செனட் உறுப்பினர், சௌராஷ்டிரா பள்ளிகளை நிறுவியவர் என மதுரையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பைத் தந்தவர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவராகவும் பல்வேறு அமைப்புகளிலும், காந்திய அமைப்புகளிலும், தலைவராகவும் செயல்பட்டு, மதுரையின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்.

இவரது பெயரை மதுரை ரயில் நிலையத்திற்குச் சூட்டுவதுடன் இவரது முழு உருவ வெண்கலச் சிலையை ரயில்வே நிலையம் முன்பாக நிறுவ வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டத்திற்குள்பட்டு, இந்த மனுவை ரயில்வே துறைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும். கோரிக்கை குறித்து ஆட்சேபகர மனுக்கள் வந்தால் அதனையும் பரிசீலனை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.