மனிதக் கழிவுகளில் இயங்கும் ரயில் : பிரிட்டனின் அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் சாதனை

Picture courtesy - Ultra Rail Partners

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் விமானத்தில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் அதிகம் விரும்புகின்றனர். அதுவும் எளிய மக்களின் விமானம் என்றால் அது ரயில் வண்டி தான்.

தரையில் ஊர்ந்தே செல்லும் ரயில் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும். ஆனாலும் உலகில் இயங்கும் பெரும்பாலான ரயில்கள் டீசலில்தான் இயங்குகின்றன. அது சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் பெருமளவில் ஏற்படுக்கின்றன.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் இப்போது மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேனை மின்சாரமாக மாற்றி, சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் இயங்கும் ரயில் வண்டியை வடிவமைத்துள்ளது அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம்.

இந்த புதிய வகை ரயில் ஆனது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயோ அல்ட்ரா என்ற பெயரில் பிரிட்டனில் இயங்கும் ரயில் கார், மீத்தேன் வாயுவை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்து இயங்குகிறது. அதன்படி 20 மீட்டர் நீளமுள்ள ரயில், மணிக்கு 50 மைல் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

Picture courtesy - Daily Mail UK

இந்த புதுவகை ரயில் ஆனது எந்தவிதமான நச்சுக் காற்றையும் காற்றில் கலக்காது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த புது வகை ரயிலில் உள்ள எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால் 2000 மைல்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வழக்கமான தண்டவாளங்களிலே இந்த ரயிலை இயக்கலாம். அதேசமயம் டீசல் எடையை காட்டிலும், இதன் எடை குறைவு என்பதால் ரயில் பாதையை பராமரிக்க செலவாகும் கட்டணமும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.