ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவக்கம் : பயணிகள் ரயில் சேவையை துவங்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தென்னிந்தியாவில் முதன்முதலாக சென்னை வியாசா்பாடியிலிருந்து ராணிப்பேட்டையை அடுத்த வாலாஜா ரோடு ரயில் நிலையம் வரை கடந்த 1853-ஆம் ஆண்டு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கி, 1856-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.

இந்த ரயில் பாதை நகரி, திண்டிவனம் புதிய ரயில்வே பாதையாக அறிவிக்கப்பட்டு, பணி தொடங்கி, நிதி இல்லாத காரணத்தால் திட்டம் முழுமை பெறாமல் முடங்கியது.

இந்த சூழ்நிலையில், ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் பொருள்களை துறைமுகங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தொழிற்துறையினா் தென்னக ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.


அதன்பேரில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சரக்கு ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.


இந்நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சரக்கு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே மூலம் நேற்று இயக்கப்பட்டது. 21 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயிலில் உர மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டன.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டையில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்படுமா என பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.