சரக்கு ரயிலை இயக்கிய முதல் பெண்கள் குழு : ரயில்வே அமைச்சர் பாராட்டு

சமீபகாலமாக இந்தியாவில் விமான ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், நடத்துனர், எல்லை பாதுகாப்பு படை, தொழில் நிறுவனம் போன்ற துறைகளில் பெண்கள் மாபெரும் சாதனையை படைத்து வருகின்றனர். 

அந்த வகையில், இந்திய ரயில்வே துறையில் ரயிலை இயக்கும் பணியில் பெரும்பாலும் ஆண்கள் தான் அங்கம் வகித்து வருகின்றனர். இதனை முறியடிக்கும் விதமாக 3 பேர் கொண்ட பெண்கள் குழு இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, ஆகான்ஷா ராய், உதிதா வர்மா  மற்றும் கும்கம் சூரஜ் டோங்ரே ஆகிய 3 பேரும் மேற்கு ரயில்வேயின் சரக்கு ரயில் ஒன்றை மஹாராஷ்விராவில் இருந்து, குஜராத்துக்கு ஓட்டி சென்றனர். 


இந்த சரக்கு ரயிலின் கூட்ஸ் கார்டாக ஆகான்ஷா ராய் இருந்துள்ளார். லோகோ பைலட்டாக இருந்த டோங்ரே, எம்.பி.ஏ பட்டதாரியாவார். மூத்த துணை லோகோ பைலட்டாக  வர்மா இருந்துள்ளார். 


இந்த ரயிலில், 43 மூடிய சரக்கு பெட்டிகளில், 3,686 டன் எடையுள்ள சரக்குகளை, மகாராஷ்டிராவின் பால்கார் – வசாய் ரயில் நிலையத்திலிருந்து, குஜராத்தின் வதோதராவுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். 


இந்நிலையில் இவர்கள் சாதனையை பாராட்டி மேற்கு ரயில்வே  தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது," வரலாற்றின் பக்கத்தை மேற்கு ரயில்வே மாற்றி எழுதி உள்ளது. பெண்களால் எந்த பணியையும், மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டனர்’’ என பாராட்டி உள்ளது.

இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கள் அனைத்து பெண்கள் குழுவும் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த உதாரணத்தை முன்வைத்துள்ளனர்" என்று இந்தியில் பதிவிட்டிருந்தார்.

புகைப்படங்கள் - ரயில்வே அமைச்சர் ட்விட்டர் பதிவு