ரயில்பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுகிறோம் என கூறி, சுமார் 950 கோடி ரூபாயை மத்திய அரசு வீணடித்து விட்டதாக குற்றச்சாட்டு

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முதற்கட்டமாக 5,231 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டன.

அதன்படி தனிமை வார்டாக மாற்ற சுமார் ரூ.2 லட்சம் செலவாகும், மறுசீரமைப்பு செலவு சுமார் 1 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.950 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்தகைய ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள் வார்டுகளில் யாரும் சிகிச்சைப் பெற்றதாக தெரியவில்லை.

இந்நிலையில் மீண்டும் 100% ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வார்டுகளாக மாற்றப்பட்ட பெட்டிகளை மீண்டும் பயணிகள் சேவைக்காக மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.