வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே டீசல் என்ஜின் மூலம் முதற்கட்ட சோதனை வெற்றி : ஜனவரி இறுதியில் மெட்ரோ ரயில் சேவை - சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை மற்றும் பரங்கிமலை முதல் சென்னை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்டிப்பு திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே 3770 கோடி ரூபாய் செலவில் 9.051 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ நிலைய கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சிக்னல்கள் மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.


இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியவுடன் விம்கோ நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை விமான நிலையத்திற்கு 90 நிமிடத்திற்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. இதில் 2 ரயில் நிலையங்கள் சுரங்கத்திலும், இதர 6 ரயில் நிலையங்கள் உயர் மட்ட பாலத்திலும் அமைந்துள்ளது.


இந்நிலையில் இன்று டீசல் என்ஜின் மூலம் இருவழி பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் உயர் மின்சார வயர், நடைமேடை தானியங்கி கதவு, சிக்னல், தானியங்கி பயணசீட்டு இயந்திரம் மற்றும் சுரங்கத்தின் காற்றோட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.மேலும் ஜனவரி இறுதியில் இந்த தடத்தில் மெட்ரோ சேவை துவங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகைப்படங்கள் மற்றும் காணொளி - சென்னை மெட்ரோ நிர்வாகம்.