புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைக்கும் பணி தொடக்கம் - பார்சல் முன்பதிவு வசதி தொடக்கம்

ரெயில் நிலையங்களிலும் பிரமாண்ட தேசிய கொடி அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே ரெயில் நிலையங்களில் பெரிய கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு பிரமாண்ட தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. ரெயில் நிலைய வளாகத்தில் மண் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ராட்சத இரும்பு குழாயில் கம்பம் பொருத்தப்பட்டு அதில் தேசிய கொடி பறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சல் சேவை

தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிற நிலையில் ரெயில்களில் பார்சல் முன்பதிவுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் முன்பதிவு செய்து பார்சலில் அனுப்பலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.