தேனியில் இருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு விரைவில் ரயில் சேவை - மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் தூரப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோ மீட்டர் தூர அகலப் பாதைகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 16ம் தேதி மாலை அதிவேகமாக ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தேனி வரையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து தேனி வரையில் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தேனியில் இருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு நேரடியாகப் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் போடி வரையில் ரயில் சேவை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.