நீலகிரி மலை ரயில் பாதையில் வழக்கமான ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது - தெற்கு ரயில்வே விளக்கம்

யுனெஸ்கோவின் பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. நீலகிரி மலை ரயில் பாதையில் பல்சக்கர தண்டவாள அமைப்பில், ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தான மலைச் சரிவுகளில் ரயில்கள் இயக்கப்படுவதால், இந்த தடம் சர்வதே அளவில் சிறப்பைப் பெற்றிருக்கிறது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் பலரும் இந்த மலை ரயிலில் பயணிக்கவே நீலகிரிக்கு வருகை தருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும், மலை ரயில் சேவைகள் எதுவும் இன்னும் துவங்கப்படவில்லை.

சமீபத்தில் நீலகிரி மலை ரயில் சேவை தனியாருக்கு வழங்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. மேலும், பயணம் செய்ய நபர் ஒருவருக்குக் கட்டணமாக ரூ.3,000 வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.


இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். 

ஆனால், தனியார் நிறுவனம் ஒன்று வாடகைக்கு மட்டுமே ரயிலை எடுத்திருக்கிறது. தனியார் மயமாக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தனது தரப்பு விளக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் மலை ரயில் தனியாருக்கு வழங்கப்படவில்லை, வாடகைக்கு மட்டுமே விடப்பட்டுள்ளதாகவும். ஆனால், சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மலை ரயிலை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிப்பது வழக்கத்தில் இருக்கிறது என்றும், இதேபால், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், இவர்கள் நிறுவனத்தின் பெயரை ரயில் பெட்டி மற்றும் இருக்கையில் அச்சிட்டதாலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

அதே சமயம் வழக்கமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு இயக்கப்படும் பயணிகள் மலை ரயில் சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மலை ரயில் இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், மலை ரயில் இயக்கும்போது, ஏற்கெனவே பெறப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜனவரி முதல் தினசரி சர்ட்டெட் ரயில் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.