ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்தன : 2020ல் இந்தியன் ரயில்வே

நமது நாட்டில் ரயில் சேவையில் தேவை குறித்து கூற தேவையில்லை. உலக அளவில் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம் என்றால், அது இந்தியன் ரயில்வே நிறுவனம் தான். நாட்டின் மிகப்பெரிய பரந்த நிலப்பரப்பை இணைப்பவை ரயில்கள்.

இதில் மலை ரயில் சேவை, ராஜ்தானி, சாதாப்தி, துரந்தோ, சம்பர்க் கிரந்தி, அதிவிரைவு, விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் என பல ரக ரயில் சேவைகள் உள்ளன. மேலும் அனைத்து இடத்திலும் ரயில் சேவை அத்தியவசியமாக இருந்தது.

இந்திய ரயில்வேயின் 167 கால வரலாற்று சக்கரம் 2020 ஆம் ஆண்டில் ஓய்வெடுத்தது என்றால் மிகையில்லை.

அப்படியான ஒரு சேவை 2020 ஆம் ஆண்டில் ஸ்தம்பித்து இருந்தது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கு அதை உண்மையாக்கியது.

கொரோனா அலை பரவியதும், அரசு ஊரடங்கு அறிவித்தது. பின்னர் படிப்படியாக போக்குவரத்து சேவைகளை முடக்கியது. ரயில்களை பொறுத்தவரை மக்கள் முன்கூட்டியே பயணங்களுக்கு திட்டமிட்டிருந்தனர்.

பொது முடக்க காலக்கட்டத்தில், ரயில்வேத்துறையுணருக்கு ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப கொடுப்பதே பெரிய வேலையாக இருந்தது.

ரயில் சேவைகள் ரத்து காரணமாக 2020 ஆம் ஆண்டில் கோடைக்கால சுற்றுலா கடும் இழப்புகளைக் கண்டன. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்பதால், மத்திய அரசு அதற்கான முயற்சிகளை எடுத்தது. மாநிலங்களிடையே புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. 

மேலும் மக்களின் பொருள் சேவைகளை தடைபடாத வகையிலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது கொரோனா அச்சம் குறையத் தொடங்கியதும், மெல்ல மெல்ல சிறப்பு ரயில் சேவை என்ற பெயரில் பல வழிதடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் முழுமையான ரயில் சேவை இன்னமும் தொடங்கவில்லை. திட்டமிட்ட சில தடங்களில் மட்டுமே குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே சமயம் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் போக்குவரத்தினை குறைத்துக் கொண்டதால், ரயில் சேவைகளை முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. மறுபுறம் உருமாறிய கொரோனா அலை உருவாக உள்ளதாக எச்சரிக்கை செய்யப்படுவதால் பிறக்கவிருக்கும் 2021ம் ஆண்டு ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுமா என்பது சந்தேகமே. எனினும் 2021 ஆம் ஆண்டிலாவது மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.