மதுரை - அருப்புக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்தில், திருப்பரங்குன்றம் - மேலமருதூர் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்


தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும் அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து 1999-2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்தி குளம், புதூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மதுரை - தூத்துக்குடி இடையே 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 

இத்திட்டத்துக்காக தனியார் நிறுவனப் பங்களிப்புடன் சுமார் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணியை ரயில்வே துறையின் ரயில்வே விகாஷ் நிகான் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனம் மேற்கொள்கிறது. இத்திட்டத்தில், தற்போது மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை அகல பாதை அமைக்கும் பணி நடக்கிறது.

இந்நிலையில், மேலமருதூர்-அருப்புக்கோட்டை-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகே பாதை அமைக்கும் பணி தொடங்கும். 

மதுரை - தூத்துக்குடி இடையே தற்போதுள்ள 159 கி.மீ. நீள ரயில் பாதை விருதுநகர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை சென்றடையும் வகையில் உள்ளது. இதன்காரணமாக பயண நேரம் பேருந்துகளை விட அதிகமாக உள்ளது.


புதியது பழையவை