புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் தீவிரம் - ரயில்வே அமைச்சர் தகவல் : விபத்து ஏற்படுத்தும் மிதவைகள் !

நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பாம்பன் கடலின் மீது கட்டப்பட்ட இந்திராகாந்தி சாலை பாலம், வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் வரையில் ரயில் பாலம் மட்டுமே தீவுக்குள் செல்வதற்கான ஒரே வாய்ப்பாக இருந்து வந்தது.

நூற்றாண்டு விழா கண்ட பாலம்

சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு உதவி வரும் பாம்பன் பாலத்தில் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள ஹெர்சர் தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளது. இதனால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டது.


புதிய பாலம்

இதனைத் தொடர்ந்து பாம்பன் கடலின் மீது இரு வழி பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. 

புதிய ரயில் பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் வகையில் `வெர்டிக்கல் டைப்’ தூக்கு பாலமும் அமைய உள்ளது. இதற்கென தற்போதைய தூக்கு பாலத்தின் அருகில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

புதிய பாலத்தின் பணிகள் தீவிரம் - ரயில்வே அமைச்சர் ட்வீட்

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில், புதிய ரயில் பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும். இந்த பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதையின் குறிப்பிட்ட பகுதி லிஃப்ட் போல அப்படியே மேலே தூக்கப்படும்.  முந்தைய ஹைட்ராலிக் வகை தூக்குப் பாலத்தைப் போல் அல்லாமல், இது செங்குத்தாக மேலே லிஃப்ட் போல் தூக்கப்படும் 

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலம்  இதுதான். இதனால், ரமேஸ்வரம் செல்லும்  சுற்றுலா பயணிகள், இனி பாம்பன் பாலத்தின் அடியில் கப்பல்கள் செல்வதைப் பார்க்கவும் குவிவார்கள்.

விபத்து ஏற்படுத்தும் மிதவைகள் !

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பாம்பன் வடகடல் பகுதியில் தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த கொந்தளிப்பில் புதிய பாலத்துக்கான மிதவைப் படகு இன்று(நவ 8) காலை சிக்கியது. கிரேனுடன் உள்ள அந்த மிதவை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதில் இருந்த வேலையாட்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதையடுத்து பழைய ரயில் பாலத்தில் மோதாமல் இருக்க அந்த கிரேன் மிதவையில் துழையிடப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.