கள்ளக்குறிச்சி - சின்னசேலம் புதிய ரயில் பாதை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர் தகவல்

கடந்த 2016ம் ஆண்டு கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே ரயில் பாதை அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்தில் சின்னசேலம் வட்டத்தில் 2 கிராமங்கள், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 9 கிராமங்கள் என 11 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு புதிய ரயில் பாதை பணிகள் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 2019ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், 11 கிராமங்களில் சின்ன சேலம் (வடக்கு), பொற்படாக்குறிச்சி, கீழ்பூண்டி, வினைதீர்த்தாபுரம், கனியாமூர் ஆகிய 5 கிராமங்களில் 14.81 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ரயில்வே துறையினரால் 2 பெரிய பாலங்களும், 23 சிறிய பாலங்களும் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னசேலம் - கள்ளக்குறிச்சி வரையிலான புதிய அகல ரயில்பாதை திட்டப் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.