வாலாஜா சாலை - ராணிப்பேட்டை இடையே ரயில் இன்ஜின் இயக்கி சோதனை

வாலாஜா சாலை சந்திப்பு - ராணிப்பேட்டை இடையே, 50 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த, சரக்கு ரயில் சேவையை, மீண்டும் தொடங்கும்படி, சிப்காட் தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வாலாஜா - ராணிப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான 8 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை சீரமைக்கும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. 

இந்நிலையில், நேற்று ரயில் இன்ஜின் இயக்கி முன்னோட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் ரயில்வே பாதுகாப்பு விரைவில் ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக ராணிப்பேட்டையிலிருந்து வாலாஜா சந்திப்பு வழியாக சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பயணிகள் ரயில்கள் இயக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.