சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் நவ.21ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "சென்னை, கலைவாணர் அரங்கில் 21.11.2020 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2 மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.

இவ்விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார்" என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.