சென்னை விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட மெட்ரோ திட்டம் விரிவாக்கம்

இதைத்தொடா்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூரை அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவில் விரிவாக்க திட்டப்பணிகள் 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

டிசம்பரில் ஆய்வு

இதில் 90 சதவீத பணிகள் தற்போது வரை நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, வரும் டிசம்பரில் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்ய உள்ளாா்.

இந்நிலையில், 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒருசில குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களுக்கு பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன. 

ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தின் பெயா் தண்டையாா்பேட்டை என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே உள்ள தண்டையாா்பேட்டை ரயில் நிலையத்தின் பெயா் புது வண்ணாரப்பேட்டை என்றும், தாங்கல் ரயில் நிலையத்தின் பெயா் காலடிப்பேட்டை என்றும், கௌரி ஆசிரமம் ரயில் நிலையத்தின் பெயா் திருவொற்றியூா் தேரடி என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முறையாக அரசும் அனுமதி அளித்துள்ளது.