ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து விரைவில் சரக்கு ரயில் சேவை : சென்னை கோட்ட மேலாளர் தகவல்

தென்னிந்தியாவில் முதன்முதலாக சென்னை வியாசா்பாடியிலிருந்து ராணிப்பேட்டையை அடுத்த வாலாஜா ரோடு ரயில் நிலையம் வரை கடந்த 1853-ஆம் ஆண்டு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கி, 1856-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.

இந்த ரயில் பாதை நகரி, திண்டிவனம் புதிய ரயில்வே பாதையாக அறிவிக்கப்பட்டு, பணி தொடங்கி, நிதி இல்லாத காரணத்தால் திட்டம் முழுமை பெறாமல் முடங்கியுள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் பொருள்களை துறைமுகங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தொழிற்துறையினா் தென்னக ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்பேரில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சரக்கு ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ரயில் நிலையங்களில், ரயில்வே துறை பொறியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை கோட்ட மேலாளர் பேசுகையில், ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதைத்தொடா்ந்து பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.