ரயில் நிலையங்களில் பாதுகாப்பு, கூட்ட மேலாண்மையை மறு ஆய்வு செய்கிறது ரயில்வே

வரவிருக்கும் திழவிழா காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த சவாலை எதிர்கொள்ள , கொவிட் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுடன் இன்று நடந்த இணைய கருத்தரங்கில், ரயில்வே வாரியத் தலைவர், ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ஆகியோர் வலியுறுத்தினர்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கொரோனா பரவலை தடுக்க ரயில்வே நிர்வாகம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே களப் பணியில் ஈடுபட்டுள்ள  அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கொவிட் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படியும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

திருவிழாக் காலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க, ‘மேரி சகேலி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. பெண் பயணிகளிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். பெண் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளில், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவிழா காலத்தை சாதகமாக பயன்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடலாம் என்பதால், இந்த அச்சுறுத்தலை போக்குவதற்கான செயல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை  அடையாளம் கண்டு கைது செய்ய, ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை, தேவைப்படும் பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கைகளை தொடரவும், ரயில்வே கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.