நாமக்கல்லை புறக்கணிக்கும் குளிர்சாதன விரைவு ரயில் - மாவட்ட மக்கள் அதிர்ச்சி

நாமக்கல்லை புறக்கணிக்கும் குளிர்சாதன விரைவு ரயில் - மாவட்ட மக்கள் அதிர்ச்சி


நாமக்கல் - கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு, ரயில் பாதை துவங்கப்பட்டது. இவ்வழியாக, சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற ஊர்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தொடர்ந்து, நாடுமுழுவதும், மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலம் - நாமக்கல் - கரூர் ரயில் தடத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை - மதுரை இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிவேக விரைவு ரயில் (06019/20) வாரத்திற்கு, மூன்று முறை இயக்கப்படுகிறது. இந்த ரயில், மாவட்ட தலைநகரமான நாமக்கல்லில் நிற்காமல் செல்கிறது. தற்போது நாமக்கல்லில் இருந்து சென்னை செல்ல எந்த ரயிலும் இல்லாததால், இந்த ரயில் நாமக்கல்லில் நிற்கும்பட்சத்தில் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே இந்த ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்

இக்கோரிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நாமக்கல் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.