மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இரண்டு ரயில் திட்டங்களுக்கு புதிய வளர்ச்சி வங்கி ரூ.5,466 கோடி கடனுதவி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா நாடுகள் அடங்கியது, பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது, என்.டி.பி., எனப்படும் புதிய வளர்ச்சி வங்கி. 

சீனாவின் ஷாங்காயை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த வங்கியின் நிர்வாகக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இரண்டு திட்டங்களுக்கு, கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 1,778 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படுகிறது.

மேலும் டில்லியில் இருந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், மீரட்டை இணைக்கும் வகையிலான, மண்டல பறக்கும் ரயில் திட்டத்துக்கு, 3,688 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.