சென்னை - திருப்பதி இடையே வாராந்திர தனியார் ரயில் சேவை : தொழிற்சங்கங்கள் கண்டனம்

ரயில்வே அமைச்சக அறிக்கையின்படி, நாடு முழுவதும் 109 ரயில்வே வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்திலும் தெற்கு ரயில்வே சார்பில் 13 ரயில்கள் தனியார்மயமாக்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில்கள் அனைத்தும் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வந்தனர். 

இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை - திருப்பதி மற்றும் எர்ணாகுளம் - கொச்சுவெளி இடையே என இரண்டு ரயில்கள் இயக்குவதற்கு திடீரென நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வழியாக ரேணிகுண்டாவுக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்கத்தில் திருப்பதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தடையும். பின்னர் காலை 10.10 மணிக்கு ரெனிக்குண்டாவில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 12.50 மணிக்கு வந்தடையும். இதற்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென இரண்டு தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து DREU தொழிலாளர்களை திரட்டி சென்னை, எர்ணாகுளம் மற்றும் கொச்சிவெளியில் போராட்டம் நடத்தப்படும் என்றும். 2023ல் தனியார் ரெயில் என சொல்லிவிட்டு பொது முடக்கத்தில் புறநகர் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதி தராமல் தனியார் ரெயில் அனுமதிப்பது கண்டனத்திற்குறியது என்றும். தனியார் ரெயில் இயக்க விடமாட்டோம் என்றும் DREU மத்திய சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.