பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகளை ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தார்
இது குறித்து மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி தனது முகநூல் பக்கத்தில் "பாம்பன் கடலில் ரூபாய் 250 கோடி அளவிலான செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகளை ஆய்வு செய்தேன்.

புதிய ரயில் பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அப் பணிகளை பார்வையிட கடலுக்குள் படகில் சென்று புதிய ரயில் கால திட்ட ஆலோசகர் அப்துல் ஹமீத்-யிடம் பணிகள் முடியும் காலம் பாலத்தின் தூண்கள் விபரம் தூக்கு பாலத்தில் சிறப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தேன்.

கட்டுமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தேன்.

புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்கு பாலமானது மூன்றரை மீட்டர் உயரத்தில் கட்ட முடிவு செய்திருப்பதாகவும், இந்த உயரத்தில் தூக்குப்பாலம் அமையும் பட்சத்தில் மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் கட்டப்பட உள்ள தூக்கு பாலத்தை கடல் மட்டத்திலிருந்து 8 முதல் 10 மீட்டர் உயரத்தில் கட்டவேண்டும் எனவும், அப்பகுதி மீனவர்கள், மதிமுக மாவட்டச் செயலாளர் பேட்ரிக் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

அதனையும் தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசி, மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு பணிகள் நிறைவடைய வலியுறுத்த உள்ளேன்.

மேலும் புதிய ரயில் பாலம் கட்டி பயன்பாட்டிற்கு வந்த பிறகு தற்போது உள்ள 105 ஆண்டுகளை கடந்த பழமையான ரயில் பாலத்தை அகற்றாமல் அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்லும் வகையில் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.