உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்படுமா ?


நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது பல தளர்வுகளுடன் இம்மாதம் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தளர்வுகளில் சுற்றுலாத் துறையைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன

இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் பூங்காக்கள் அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் "நீலகிரி மாவட்டம் சகஜ நிலைக்குத் திரும்ப அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட வேண்டும். சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டால்தான் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவுக்காக நீலகிரி மாவட்டம் வருவார்கள். இதனால் எங்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்" என்றனர்.

மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நீலகிரி மலை ரயிலை இயக்க வேண்டும். ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில், மலை ரயிலை இயக்க ரயில்வே அமைச்சம் அனுமதி அளிக்க வேண்டும். மலை ரயிலில் குறிப்பிட்ட அளவே பயணிகள் பயணிக்க முடியும் என்ற நிலையில், தனிமனித இடைவெளி மற்றும் கரோனா வழிமுறைகளை எளிதாக கடைப்பிடிக்க முடியும்.

மலை ரயில் சேவை தொடங்கினால், மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலா மேம்படும். மேலும், சரிந்த பொருளாதாரம் மீட்கப்படும்" என்றும் அவர்கள் கூறினார்.

புதியது பழையவை