வாரம் இருமுறை இயங்கி வந்த திருநெல்வேலி - கத்ரா விரைவு ரயில் இனி வாரத்தில் ஒருமுறை மட்டுமே இயங்கும் : 7 பெட்டிகளுடன் இயங்கிய ரயில், இனி அதிக பெட்டிகளுடன் இயங்கும்


நெல்லையில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4மணிக்கு காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கத்ரா ரயில் நிலையத்திற்கு ரயில் இயக்கப்படுகிறது.

7 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு ரயில் நிலையம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி - வைஷ்ணவ தேவி கத்ரா 'ஹிம்சாகர்' மற்றும் மங்களூர் - வைஷ்ணவ தேவி கத்ரா 'நவயுக்' ரயில்களில் இணைக்கப்பட்டு வைஷ்ணவ தேவி கத்ரா ரயில் நிலையம் நோக்கி செல்லும். இதே போல திரும்பி வருகையில் ஈரோடு ரயில் நிலையம் வரை 'ஹிம்சாகர்' மற்றும் 'நவயுக்' ரயில்களில் ஈரோடு வரை இணைந்து வந்து பின்னர் ஈரோடு - நெல்லை இடையே தனி ரயிலாக இயங்கி வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் இது போன்ற ரயில்கள் இணைப்பை ரயில்வே நிர்வாகம் தவிர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து, ஈரோடு - வைஷ்ணவ தேவி கத்ரா ரயிலை தனி ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் இனி 20-24 பெட்டிகள் கொண்ட முழு ரயிலாக இயங்கவுள்ளது

தற்போதைய வழித்தடத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இனி திருநெல்வேலியில் இருந்து திங்கள்கிழமையிலும், வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து வியாழக்கிழமையிலும் இந்த ரயில் சேவை இருக்கும்.

இந்த ரயிலுக்கான புதிய அட்டவணையை தெற்கு ரயில்வே வடிவமைத்து வருகிறது. இந்த மாற்றம் எதிர் வரும் புதிய அட்டவணையில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை