2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கம்: ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தகவல்


ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ரயில்வே நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் நாடு முழுவதும் பல பகுதிகளில் நடக்கின்றன. மேற்கு ரயில்வேயில் காந்தி நகர் ரயில் நிலையம், மேற்கு மத்திய ரயில்வேயில் ஹபிப்கன்ச் , வடகிழக்கு ரயில்வேயில் கோமதி நகர் ரயில் நிலையம்,  வடக்கு ரயில்வேயில் அயோத்தியா ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன.

நாக்பூர், குவாலியர், அமிர்தசரஸ், சபர்மதி, நெல்லூர், புதுச்சேரி, டேராடூன் மற்றும் திருப்பதி ஆகிய 8 ரயில் நிலையங்களை  பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சீரமைக்க சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டியுள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரயில்வேத்துறை எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யவில்லை.

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, தற்போதுள்ள சரக்கு ரயில் முனையங்களை நவீனப்படுத்துவது, புதிய சரக்கு ரயில் முனையங்களை தொடங்குவது அவசியம்.   சரக்கு ரயில் முனையங்களில் 60 பணிகள் ரூ. 1,975 கோடியில் மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 31 பணிகள் முடிவடைந்து விட்டன. மற்ற பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

உரங்களை கொண்டு செல்வதற்கு சரக்கு பெட்டிகளை பதிவு செய்வதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ரயில்வேயிடம் போதிய அளவில் சரக்குரயில்  பெட்டிகள் நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை, 24.26 மில்லியன்  டன் உரங்களை  இந்திய ரயில்வே கொண்டு சென்றுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் கொண்டு செல்லப்பட்ட அளவை விட 7.44 சதவீதம் அதிகம்.

2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதையும் 100% மின்மயமாக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 63,631 கி.மீ தூரத்துக்கு அகல ரயில் பாதை உள்ளது. இதில் 39,866 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் 23,765 கி.மீ தூரம் மின்மயமாக்க வேண்டியுள்ளது. ரயில்வே திட்டங்கள் மாநில வாரியாக செயல்படுத்தப்படுவதில்லை. மண்டல வாரியாக செயல்படுத்தப்படுகின்றன.