16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள கடலூர் - சென்னை ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்படுமா ? : பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிகப்பு நிறத்தில் இருப்பது கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, ரயில் பாதை அமைக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையேற்று, கடலுார் - புதுச்சேரி - சென்னை ரயில் பாதை திட்டம் வகுக்கப்பட்டு, ஆய்வு பணிக்காக ரூ. 14 கோடியை கடந்த 2003-04ல் அப்போதைய மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

பின்னர், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலுார் வரை, கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்து, கடந்த 2007ம் ஒப்புதல் அளித்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக, கடலுார் வரை, 179.2 கி.மீ., துாரத்திற்கு, ரயில் பாதை அமைக்க, 2008 ல், ரூ.523 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ரயில் பாதை அமைப்பதற்கான, சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய, கடந்த 2010--11ம் ஆண்டு ஆரம்பக் கட்ட சர்வே பணிக்கு, ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் அன்றைய நிதிநிலை அறிக்கையில், ரூ. 6.66 கோடி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே கட்டுமானத் துறை, இதற்கான ஆய்வுப் பணியை மேற்கொண்டது.

சென்னை கடற்கரையில் இருந்து பெருங்குடி வரை, பறக்கும் மேம்பால ரயில் சேவை உள்ளது. இதில் பெருங்குடியில் இருந்து, சோழிங்கநல்லுார், கோவளம், மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக, கடலுார் வரை ரயில் பாதை அமைப்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.

வருவாய் கிடைக்காது !

ஆனால், சென்னையில் இருந்து பெருங்குடி வரை மேம்பால ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நடத்த முடியாது. பொதுவாக, பயணிகள் ரயில்களால், ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்காது. சரக்கு ரயில்களால் மட்டுமே அதிக வருவாய் கிடைக்கும். கடலோரமாக ரயில் பாதை அமைத்தால், அதிகளவில் சரக்கு ரயில்கள் சென்று வர வாய்ப்புள்ளது.

மாற்று திட்டம்.

செங்கல்பட்டில் இருந்து பெருங்குடி வரை, 45 கி.மீ., துாரத்திற்கு, ரயில் பாதை அமைப்பது குறித்து, சர்வே நடத்தப்பட்டது. ஆனால் திட்டம் துவங்கவில்லை

பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், கடலோர மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். மகாபலிபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள், கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.


கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் மூலம் பயண நேரம் குறையும்.

சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்திற்கு கடலுாரில் இருந்து ரயிலில் செல்லும் வசதி கிடைக்கும்.கடலுாரில் இருந்து விழுப்புரம் வழியாக 100 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் பயண துாரம் குறையும். கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்து தினசரி சென்னைக்கு சென்று வருபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.