தெற்கு ரயில்வேயில் பயணிகள் ரயில்களுடன் இயக்கப்படும் 8 மெட்ரிக் டன் மற்றும் 23 அல்லது 24 டன் பார்சல் வேகன்களில் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை அனுப்புவதற்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்வது, குறிப்பிட்ட பயணிகள் ரயில் அல்லது கால அட்டவணையில் இயக்கப்படும் பார்சல் ரயில்கள் ஆகியவற்றில் சரக்குகளை அனுப்புவது ஆகிய புதிய திட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சரக்குகளை அனுப்ப முன்பதிவு செய்ய விரும்புவோர் 10 சதவீத பார்சல் கட்டணத்தை முன்பே செலுத்த வேண்டும். மீதம் உள்ள 90 சதவீத கட்டணத்தை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக செலுத்த வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவை ரத்து செய்தால் 50 சதவீத முன் வைப்புக் கட்டணம் திருப்பித் தரப்படும். தவறினால் முழு முன்வைப்புக் கட்டணமும் காலாவதியாகிவிடும். இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே ஒப்பந்தம், குத்தகை அடிப்படையில் உள்ள பார்சல் வேகன்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது.

இந்த முன்பதிவு வசதி பார்சல் வேகன்களை முறையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், மேலும் தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு பார்சல் வேகன் இயக்கும் வசதியை அதிகப்படுத்தவும் உதவும். பார்சல் வேகன்கள் முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலைய பார்சல் பிரிவு மேற்பார்வையாளரையோ அல்லது ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள வர்த்தகப் பிரிவையோ தொடர்பு கொள்ளலாம். பார்சல் சேவை தொடர்பாக மேலும் தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 139 – ஐ தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாம் தெரிவித்துள்ளது.