ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் , இந்திய பிரத்யேக சரக்கு ரயில்பாதை கழக பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்திய பிரத்யேக சரக்கு ரயில்பாதை கழகப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், மூத்த அதிகாரிகள் இத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து தெரவித்தனர். உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் மேற்கு பாதை, பஞ்சாபின் லூதியானா அருகிலுள்ள சானேவாலில் இருந்து மேற்குவங்கத்தின் தன்குனியை இணைக்கும் கிழக்குப் பாதை ஆகியவை 2021 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் காரணமாக பணிகள் தடைபட்டதால் ஏற்பட்டுள்ள கால இழப்பை ஈடுகட்டும் வகையில், திட்டத்தை விரைந்து மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு  திரு. கோயல், இந்திய பிரத்யேக சரக்கு ரயில்பாதைக் கழகத்தை அறிவுறுத்தினார். மிகவும் சவாலான பகுதியைக் கண்டறிந்து, அதற்கு விரைவான தீர்வைக் காண அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். சிறந்த தீர்வுகளைத் தெரிவிப்பதை ஊக்குவிக்க  இளைஞர்களை ஈடுபடுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார்.


அனைத்து ஒப்பந்ததாரர்களின் வேலையை கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வது  பற்றியும் தீர்மானிக்கப்பட்டது. திட்டத்தின் வாராந்திர முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிக்கும் புதுமையான பொறிமுறை வகுக்கப்படும்.

பிரத்யேக சரக்குப் பாதைகள் இந்திய அரசு மேற்கொண்டுள்ள மிகப்பெரும் ரயில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இத் திட்டத்துக்கான மொத்தச் செலவு ரூ.81,459 கோடி.  இத்திட்டப்பணிகளைத் திட்டமிடுதல், மேம்பாடு, நிதி ஆதாரங்களைத் திரட்டுதல், கட்டுமானம், பராமரிப்பு, இந்தப் பாதைகளில் போக்குவரத்தை  இயக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் நிறுவனமாக இந்தியப் பிரத்யேக சரக்கு ரயில்பாதைக் கழகம் செயல்படும். இந்த நிறுவனத்தின் முதல் கட்டப்பணி மேற்குப் பாதை ( 1504 ரூட் கி.மீ) மற்றும் கிழக்குப் பாதை (!856 ரூட் கி.மீ)  ஆகியவற்றைக் கட்டமைப்பதாகும். மொத்த தூரம் 3360 ரூட் கி.மீ.