தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை - ஒரே நாடு ஒரே தேர்வுக்கு கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி நியமனங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க சட்டமியற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் 24.08.2020 அன்று வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், மகராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இப்படி சட்டங்கள் உள்ளன. அண்மையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழக அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும்போது அத்தகைய விதி எதுவும் இல்லை.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதி 21ன் படி தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் தெரியாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலத்தவர்கள் இங்கே அரசுப்பணிகளில் நியமிக்கப்படுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்களை கொண்டு வந்து பணியமர்த்தம் செய்கின்றனர். இதனால் அத்தகைய தனியார் தொழிற்சாலைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனிடையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்வு என்ற கொள்கையை இப்போது நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி ரயில்வே, தபால் தந்தி, பொதுத்துறை வங்கிகள், மத்திய அரசு அலுவலகப் பணிகள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு வேலைகளுக்கும் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்தி பேசுகிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமான ஓர் அறிவிப்பாகும். இதனால் இனிமேல் மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட நியமிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்வு என்ற திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி நியமனங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தமிழக அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தத்தமது வீடுகளின் முன்னால் நின்று 24ம் தேதி காலை 11 மணிக்கு சமூக இடைவெளியைக் கடைபிடித்து முகக் கவசம் அணிந்தபடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்தப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.