தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆட்டோமொபைல் தொழிலில் சரக்கு போக்குவரத்துக்காக, இரண்டு அடுக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலின் முதல் சேவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சரக்கு ரயில் சேவைக்கு ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, இரண்டாவது முறையாக, இரண்டு அடுக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது. இந்த ரயில் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹரியாணா மாநிலம் ஃபராக்நகருக்கு செல்கிறது.


சென்னையிலுள்ள பிரபல காா் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் காா் நிறுவனத்தில் இருந்து 270 காா்கள் இந்த ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டன. இந்த சரக்கு ரயிலில் 27 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2,306 கிமீ தூரம் வரை இந்த காா்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலமாக, ரயில்வே நிா்வாகத்திற்கு ரூ.29.90 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புகைப்படங்கள் - தெற்கு ரயில்வே