மறு அறிவிப்பு வரும் வரை வழக்கமாக இயங்கி வந்த ரயில்கள் ரத்து தொடரும் : மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே அமைச்சகம்

கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

அதே சமயம் வழக்கமாக இயங்கி வந்த பயணிகள் ரயில் சேவைகளின் ரத்து காலம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாசஞ்சர், எக்ஸ்பிஸ் உட்பட வழக்கமான ரயில் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்சமயம் சென்னையில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் இருமுறை ராஜ்தானி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.