மும்பையை தொடர்ந்து சென்னை, செகந்திராபாத், கொல்கத்தா நகரங்களில் தனியார் மூலம் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு திட்டம் !

நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே துறை கடந்த 4 மாதங்களாக முழுமையாக செயல்படவில்லை.

இதன் காரணமாக, ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, ரயில்வேயில் பல்வேறு சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே, ரயில்கள் இயக்க தனியாருக்கு அனுமதி, வாடகை கட்டடத்தில் இயங்கும் ரயில்வே அலுவலகத்தை சொந்த இடத்துக்கு மாற்றுவது, ரயில்வேயின் நிரந்தர காலிப் பணியிடங்களை 50 சதவீதம் வரை திரும்ப ஒப்படைப்பது உள்ளிட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் முக்கிய நகரங்களில்  ரயில்வே கவுன்ட்டர்கள் மூலமாக, டிக்கெட் முன்பதிவு, புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. தற்போது, இந்த டிக்கெட் விற்பனையை பொது-தனியார் பங்களிப்பு மூலமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மும்பை புறநகர் ரயில்வேயில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திட்டம் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் நகரங்களில் அடுத்தகட்டமாக அமல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, கொல்கத்தா, மும்பை, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவையில் 2017-18-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.6,184.45 கோடி வருவாய் இழப்பும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ.6,753.56 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்புக்கு மின்சார ரயில்களில் குறைவான கட்டண நிர்ணயம் முக்கிய காரணமாக, ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்திய ரயில்வேயை பொருத்தவரை, நாடு முழுவதும் 3,695 விரைவு ரயில்கள், 3,947 முன்பதிவில்லாத பயணிகள் ரயில், 5,881 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,523 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இவற்றில் புறநகர் மின்சார ரயில் இயக்கம் முக்கிய சேவையாக பார்க்கப்படுகிறது.