தெற்கு ரயில்வேயின்,  சென்னை ரயில்வே கோட்டம் முதன்முறையாக BCACBM சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை அரக்கோணம் 🔄 செங்கல்பட்டு தடத்தில் அமைந்துள்ள வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹரியானா மாநிலம், ஃபரூக்நகர் ரயில் நிலையம் வரை தனது முதல் சரக்கு போக்குவரத்தை தொடங்கியுள்ளது.

இந்த முதல் BCACBM சரக்கு ரயில் சேவையை டிராக்1 என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து , நேற்று(ஆகஸ்ட் 1, 2020) கொடியசைத்து தொடங்கப்பட்டது.

இந்த ரயிலில் சென்னையிலுள்ள புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் நிஸான்-லிருந்து  282 கார்களை ஏற்றிச் சென்றது. இதன் மூலம் ரயில்வேத்துறைக்கு 30 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


📌ஒரு BCACBM ரயில் பெட்டியானது 10 முதல் 12 கார்கள் கொள்ளளவு கொண்டதாகும்.

📌ஒரு சரக்கு ரயிலில் 27 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

📌எதிர்வரும் நாட்களில் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து மாதத்திற்கு மூன்று சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தெற்கு ரயில்வேயின் அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. அதன்படி சென்னை கோட்டம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாக ஒரு புதிய குழு ஒன்றினை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது டிராக்1 என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தோடு முதன்முறையாக கைகோர்த்து தனது வியாபார எல்லையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் ரயில்வே அமைச்சகம்  "AFTO" என்ற ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் ரயில் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி ஆட்டோ மொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலுள்ள தயாரிப்புகளை நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள நுகர்வோருக்கு கொண்டுசெல்ல முடியும்.  இத்திட்டத்தின்படி லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும்  நிறுவனங்கள் தாமாகவே சரக்கு ரயில்களை ரயில்வே துணையோடு இயக்க முடியும்.