தனியார் ரயில்கள் நேரத்திற்கு முன்பாகவோ, தாமதமாகவோ வந்தால் அபராதம் - வரைவு அறிக்கையில் தகவல்

தனியார் ரயில்களை இயக்க நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கு முந்தைய 2வது மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.

பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் பங்கேற்புத் திட்டம், தரமான சேவை, பயண நேரம் குறைப்பு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தேவை மற்றும் விநியோக இடைவெளியைக் குறைக்கும் என்பதால், பயணிகளின் அனுபவத்தில் முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வரும். இத்திட்டம், பொதுமக்களின் போக்குவரத்து சேவைகளை உயர்த்தும். இந்த ரயில்கள், ஏற்கனவே ரயில்வே இயக்கி வரும் ரயில்களுடன் கூடுதலாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தனியார் ரயில்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பில் வளர்ச்சி ஏற்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள தனியார் நிறுவனங்கள், இரண்டு கட்ட ஏலப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்பத்துக்கு முந்தைய முதலாவது கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் ஏல நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரயில்வே அமைச்சகம், விண்ணப்பத்துக்கு முந்தைய இரண்டாவது கூட்டத்தை நேற்று நடத்தியது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த 23 உத்தேச விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொண்டதன் மூலம், இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு காணப்பட்டது.

மேலும் விண்ணப்பதாரர்கள் எழுப்பிய, ஏராளமான விஷயங்கள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

திட்டத்திற்கு உரிய ஆவணங்களை வெளிப்படையான முறையில் பகிர்ந்து கொள்ளும், ரயில்வே அமைச்சகத்தின் முடிவை விண்ணப்பதாரர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

அதோடு, தனியார் ரயில்களை இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • தனியார் ரயில்கள் 95% நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ரயில்கள் குறித்த நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவோ, 15 நிமிடம் தாமதமாகவோ வந்தால் அபராதம் விதிக்கப்படும்.
  • நேரம் தவறாமையில் ஒவ்வொரு ஒரு சதவீதம் குறையும்போதும், 200 கிலோ மீட்டருக்கான பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டிவரும்.
  • ரயில்வே கட்டமைப்பை பயன்படுத்துவதற்கு தனியார் ரயில்கள் பயன்பாட்டு கட்டணமாக கிலோ மீட்டருக்கு ரூ.512 வசூலிக்கப்படும்.
  • ரயில்வேயால் ரயில் தாமதமானால், ரயில்வே தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்கும்.
  • ரயில் ரத்து செய்யப்பட்டால், பயன்பாட்டு கட்டணத்தில் நான்கில் ஒரு பகுதியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ரத்துக்கு ரயில்வே காரணமானால், அதே கட்டணத்தை ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும்.

இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதியது பழையவை