இந்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையில் துணை ஆய்வாளர் பயிற்சி பெற்ற 83 மகளிர் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தனர்.

மவுலா-அலியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சி மையத்தில் பல்வேறு பிராந்திய ரயில்வேக்களைச் சேர்ந்த 83 மகளிர் துணை ஆய்வாளர் பயிற்சி பெற்றவர்களின் (அணி எண். 9 ஏ) விடைபெறும் அணிவகுப்பு இன்று, அதாவது, 10 ஆகஸ்டு, 2020 அன்று, நடைபெற்றது.

சிறந்த மாணவியாகவும், உட்புற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியவராகவும் திருவாளர். சன்ச்சல் செகாவத் தேர்ந்தெடுக்கப்பட்டர். வெளிப்புற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியவராக திருவாளர். ஸ்மிரிதி பிஸ்வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டர். திருவாளர். சன்ச்சல் செகாவத் அணிவகுப்புக்குத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் திரு கஜானன் மல்லையா, அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியுமாறும், ரயில்வே சொத்துகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைகளைத் திறம்பட ஆற்றுமாறும் பெண் துணை ஆய்வாளர்களை கேட்டுக்கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கடத்தல்கள் அதிகரித்து வருவதால், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இளம் அலுவலர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்திய அவர், சிறப்பான செயல்திறனுக்காக மகளிர் துணை ஆய்வாளர்களை பாராட்டினார். மிக உயரிய அர்ப்பணிப்போடும், இரக்க உணர்வோடும் அவர்கள் தங்களது கடமையை செய்யவேண்டும் என்னும் தனது அவாவை அவர் வெளிப்படுத்தினார்.

இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்தவுடன், ரயில்வேயில் தாங்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்களை சமாளிப்பதற்காக துணை-ஆய்வாளர் பயிற்சி மாணவர்களுக்கு உள்புற மற்றும் வெளிப்புற விஷயங்களில் 9 மாதங்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்ணமயமான மற்றும் சிறப்பான அணிவகுப்பில் இன்று பங்கேற்ற அவர்கள், உறுதிமொழியை ஏற்றதற்கு பிறகு ரயில்வே பாதுகாப்புப் படையில் உறுப்பினர்கள் ஆனார்கள்.

தனி நபர் இடைவெளி மற்றும் கோவிட்-19 தொடர்பான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.