வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி பாரம்பரிய ரயில் நிலையமாக அறிவிக்கப்படுமா ? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

1754-ல் முகமது அலி என்பவர் ஆற்காட்டை ஆண்டார். இதனை ஏற்காத ஐதராபாத் நிஜாம் ஆற்காட்டின் மீது படையெடுத்தபோது முகமது அலி ஆங்கிலேயரின் உதவியை நாடினார். ஆங்கிலேயரின் படை ஐதராபாத் நிஜாமை தோற்கடித்தது. ஆங்கிலேயர்கள்தான் ‘வாலாஜா’ என்ற பட்டத்தை இந்த ஊருக்கு வைத்தனர். வாலாஜா என்றால் ‘கௌரவம் வாய்ந்தவர்’ என்று பொருள். இப்படித்தான் ஊருக்குப் பெயர் வந்தது என்கிறார்கள், வாலாஜாபேட்டை மக்கள்.


இந்த ஊருக்கு மற்றொரு பெருமையும் இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல் பயணிகள் ரயில் சேவை 1856 ஜூலை 1-ம் தேதி, சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. அந்த வகையில், இந்திய ரயில் வரலாற்றில் இடம் பெற்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. இது மட்டுமன்றி, நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1866-ல் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், பழைமையும் பெருமையும் வாய்ந்த வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம், கடந்த ஜூலை 1-ம் தேதி 164-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. எனவே, இந்த ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டுமென்று வாலாஜாபேட்டை மக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.


இது குறித்து தினசரி ரயில் பயணிகள் கூறுகையில் "கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பயணிகள் அவதியடைகிறார்கள். இந்த ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பாரம்பரிய ரயில் நிலையமாக அறிவிக்க வேண்டும்" என்றனர்.

மேலும் இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், சித்தூர், சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்வி, வேலை, வியாபாரத்திற்காகப் பயணிப்பதாகவும். இவர்களின் பயண தேவைக்காக கூடுதல் ரயில்கள் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.