லாரிகளை ரயிலில் ஏற்றிச் சென்று இறக்கும், 'ரோல் ஆன் ரோல் ஆப்' எனும், 'ரோரோ' சேவையை சேலம் ரயில்வே கோட்டத்தில் துவங்க முதற்கட்ட சோதனை

நாட்டின் வட மாநிலங்களில் இருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள், சரக்கு ரயில்களில், தென் மாவட்டங்களுக்கு வருகின்றது. இங்கிருந்து, சிமென்ட், அரிசி, ஜவுளிகள் உள்பட பல பொருட்கள் வட மாநிலங்களுக்கு ரயில்களில் செல்கின்றன. அதே போல தமிழகத்தில் பெரும்பாலும், சரக்கு லாரிகள் மூலம், இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், லாரிகளில் ரோடு வழியாக செல்வதால் தாமதம், விபத்துகள் ஏற்படுகின்றன.

Image result for roll on roll off konkan
புகைப்படம் - கொங்கன் ரயில்வே

இந்த சூழ்நிலையில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி, லாரிகளை ரயில்களில் ஏற்றி மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று இறக்கும், 'ரோல் ஆன் ரோல் ஆப்' சேவையை, கொங்கன் ரயில்வே செயல்படுத்தி வருகிறது. அதன்படி மும்பையில் இருந்து, 145 கி.மீ.,யில் உள்ள கோலட், 417 கி.மீ.,யில் உள்ள வெர்னா, கோலட் மற்றும் சூரத்கல் இடையே, 721 கி.மீ.,க்கு இச்சேவை நடக்கிறது. கோலட்- சூரத்கல் இடையே சாலை வழியாக, லாரிகள் செல்ல, 40 மணி நேரம் ஆகிறது. ஆனால், 'ரோரோ' சேவை மூலம், 22 மணி நேரத்தில் சென்று விடலாம். மேலும், 15 டன் எடை ஏற்றப்பட்ட லாரியை கோலட் - சூரத்கல் இடையே கொண்டு செல்ல, 8,600 ரூபாய் மட்டுமே செலவாகும். 15 டன்னுக்கு மேல் ஒவ்வொரு டன்னுக்கும், 350 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரயில்களில் லாரிகளை ஏற்றி இறக்க, 15 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. இதனால், இச்சேவை வரவேற்பை பெற்றிருக்கிறது.

Image result for roll on roll off konkan
புகைப்படம் - கொங்கன் ரயில்வே

இந்நிலையில் இச்சேவையை தமிழகத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தில் துவக்க வேண்டும் என ரிக் வண்டி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஒரே நேரத்தில், 50 லாரிகள், சாலை வழியை தவிர்த்து, ரயில் மூலம் செல்வதால், கார்பன் புகை வெளியேறுவதும் வெகுவாக குறையும்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஆழ்துளை கிணறு தோண்டும் ரிக் வண்டிகளின் மையமாக விளங்குகிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான ரிக் வண்டிகள், தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சென்று பணியில் ஈடுபடுகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து சாலை வழியாக செல்லும் போது டீசல் செலவு அதிகமாகிறது. தவிர, வழியில் போக்குவரத்து துறையினரின் கெடுபிடி, சுங்கவரி, வெளிமாநிலங்கள் விதிக்கும் வரி, காவல்துறையினரின் சோதனை, ரவுடிகளின் தொல்லை ஆகியவற்றை சமாளிக்க வேண்டியுள்ளது.

இதனால் செலவுகளை குறைக்கவும், இதர பிரச்னைகளை தீர்க்கவும் முடிவு செய்த உரிமையாளர்கள், சரக்கு ரயில்கள் மூலம் ரிக் வண்டிகள், உதவிக்கு செல்லும் லாரிகளை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல, மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரினர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து, திறந்தவெளி சரக்கு வேகன்களில் ராணுவ வாகனங்கள் கொண்டு செல்வது போல், ரிக் வண்டிகளையும் கொண்டுசெல்லும் சோதனை ஓட்டம் துவங்கியது.திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் ரயில் நிலையத்தில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சாய்வு தளம் வழியாக, ரிக் வண்டிகளை வேகன்களில் ஏற்றினர். இந்த ரிக் வண்டிகள் மின் கம்பிகள், நுழைவு பாலங்களில் செல்லும் போது உரசுமா எனவும், பல வகையான ரிக் வண்டிகளை ரயிலில் ஏற்றி சோதனையிட்டனர்.

இந்த சோதனை ஓட்டத்தை திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலாளர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், ராஜபாண்டி, அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

இது குறித்து ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி கூறுகையில் "இது, சுற்றுச்சூழலுக்கு உன்னதமான திட்டம். லாரிகளில், டிரைவர், கிளீனர் உடன் செல்லலாம். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் நெரிசலை, பெரிய அளவில் தவிர்க்க முடியும். விபத்துகளுக்கு வாய்ப்புகள் குறைவு. ஒரு ரயிலில், 50 லாரிகள் வரை ஏற்றி, இறக்க வாய்ப்புள்ளதால், கணிசமான அளவு சரக்குகளை கையாள முடியும். தமிழகத்தில் இருந்து ரிக் வண்டிகளை சரக்கு ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டுசெல்லும் போது 35 சதவீதம் செலவு குறையும் என்றும், தேய்மானம் இல்லாமல் பாதுகாப்புடன் கொண்டு செல்ல முடியும். இச்சேவையை விரைந்து துவக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.