உசிலம்பட்டி 🔄 போடி அகல ரயில் பாதை பணிகள் தீவிரம்

மதுரை - போடி இடையே கடந்த 2010-ம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. பின்னர் இந்த வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றுவதற்காக ரயில் கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.

ஆனால் மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததால் பல ஆண்டுகள் பணி நடைபெறாமல் இருந்தது. கடந்த இரண்டு பட் ஜெட்களில் இத்திட்டத்துக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை-உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டி-போடி என இரு பிரிவுகளாகப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மதுரை-போடி அகலப் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக 37 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை-உசிலம்பட்டி இடையே பணிகள் முடிந்து, சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையே கடந்த மார்ச் மாதம் அகல ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பொது முடக்க தளர்வை தொடர்ந்து உசிலம்பட்டி 🛤️ போடி வரை தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக பழைய முறையிலான 13 மீட்டர் நீளம் கொண்ட தண்டவாள பாதை அமைத்துள்ளனர். இதன் வழியாக சரக்கு ரயில் மூலம் 260 மீட்டர் நீளமான புதிய தண்டவாளங்கள் கொண்டு வந்துள்ளனர். 

இவற்றை கணவாய் அடிவாரம் வரை பொருத்தும் பணி நடக்கிறது. நீளமான தண்டவாளம் பொருத்துவதால் பராமரிப்பு செலவு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.