தரங்கம்பாடி 🛤️ மயிலாடுதுறை இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்கிடவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தரங்கம்பாடியில் சோழமண்டல கடல்அரசி என புகழப்பட்ட வங்ககடல் உள்ளது. டேனீஸ்காரர்களால் கட்டப்பட்ட டேனிஷ்கோட்டை, பழமையான மாசிலநாதர்கோயில், சீகல்பால்குகட்டிய புதிய ஜெருசலம் ஆலயம், பழமையான தர்க்காக்கள் உட்பட புராதான சின்னங்கள் அமைந்துள்ளன. 

இவைகள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை கவர்ந்துவருகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கு ரயில் போக்குவரத்து அவசியமானது.

1926ஆம் ஆண்டு தரங்கம்பாடி மயிலாடுதுறை ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. அப்போது 6 முறை பயணிகள் ரயில் சேவையும், 4 முறை சரக்கு ரயில் சேவையும் இருந்துவந்தது. இதன்மூலம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல், அரிசி, உளுந்து, பயறு, நிலக்கடலை, மீன், கருவாடு, உப்பு போன்ற பொருள்கள் மயிலாடுதுறைக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பபட்டு பின் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு வர்த்தகம் நடந்தது.

இந்த ரயில் சேவை மூலம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோயில், மண்ணம்பந்தல்,பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், ஆக்கூர் பகுதி மக்கள் மாணவ}மாணவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் பயனடைந்துவந்தனர். இந்நிலையில் 1986ஆம் ஆண்டு முதல் முற்றிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தென்னக ரயில்வே நாகப்பட்டினம் முதல் காரைக்கால் வரை ரயில்சேவை தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வரும் இந்த சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை தொடங்கி காரைக்காலுடன் இணைத்தால் பொதுமக்கள் பயனடைவார்கள். 

ஆகையால் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதற்கான நிதியினை பெற்று பணியை துவங்கப்படவேண்டும். தமிழக அரசும் முயற்சித்து மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.